திருப்பதி வெங்கடாசலபதி ஓவியத்தை வரைந்த கோவில்பட்டி ஓவியர் சீனிவாசன் காலமானார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பதி வெங்கடாசலபதி ஓவியத்தை வரைந்த கோவில்பட்டி ஓவியர் சீனிவாசன் காலமானார்

திருப்பதி வெங்கடாசலபதி ஓவியத்தை வரைந்த கோவில்பட்டி ஓவியர் சீனிவாசன் காலமானார்

திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியின் புகழ்பெற்ற ஓவியம் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் உருவங்களைத் தத்ரூபமாக வரைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த மூத்த ஓவியர் சீனிவாசன் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 86. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் வசித்து வந்த சீனிவாசன், 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் பிரபல ஓவியர் கெண்டையராஜூவிடம் ஓவியக் கலையைக் கற்றுத் தேர்ந்தார். கடந்த 1970-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பை ஏற்று, கோவிலின் கருவறையில் இருந்த வெங்கடாசலபதி சிலையின் தோற்றத்தை நேரில் பார்த்து ஓவியமாகத் தீட்டினார். இந்தப் பணியின்போது சிலைக்கு அருகிலேயே அமர்ந்து அதன் உருவ அமைப்பைத் துல்லியமாக வரைந்தார். மேலும், நகைகள் அணிவிக்கப்பட்ட தோற்றத்திலும், நகைகள் இல்லாத நிலையிலும் என இரண்டு விதமான ஓவியங்களை உருவாக்கினார். இவற்றில் அவரது படைப்புக்கு தேவஸ்தானத்தின் அங்கீகாரமும் கிடைத்தது. சீனிவாசன் வரைந்த வெங்கடாசலபதி ஓவியத்தை சிவகாசியைச் சேர்ந்த அச்சகத்தினர் பெற்று, புகைப்படங்களாகவும் நாள்காட்டிகளிலும் அச்சிட்டு வெளியிட்டனர். இதன் மூலம் அவரது ஓவியம் பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளில் இடம்பெற்று மக்களின் கவனத்தைப் பெற்றது. இதனால் அவர் பரவலாக அறியப்பட்ட ஓவியராகத் திகழ்ந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனது இல்லத்தில் சீனிவாசன் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து ஏராளமானோர் வீட்டிற்கு நேரில் சென்று மலர் மாலைகள் அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.