சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த பாத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஊர்வலம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள்: * ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதனுடன் இணையும் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். மாற்றுப் பாதையாக ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை ஆகியவற்றை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம். * ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்துக்கு அனுமதி இருக்காது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை அடையலாம். மேலும் ஈ.வெ.ரா. பெரியார் சாலை, முத்துசாமி சாலை, ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம். * ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் நேரத்தில், சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். * ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அந்த வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம். * ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும் போது, நாராயணகுரு சாலை - ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மாற்றுப் பாதையாக வேப்பேரி நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம். * ஊர்வலம் ஏ.பி. சாலையை அடையும் போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. * ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி போக்குவரத்து தடை செய்யப்படும். அந்த வழியாக வரும் வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக செல்லலாம். * ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் நேரத்தில், மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது. அதற்கு பதிலாக புரசைவாக்கம் நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம். * ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படுவார்கள். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு, ஊர்வலம் செல்லும் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக போலீசார் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.