திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியில், வைக்கோல் படப்பை பன்றி சேதப்படுத்திய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீவலப்பேரி கட்டளை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் நடராஜன் (38). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். நடராஜன் தனது வீட்டில் பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, நடராஜனின் பன்றி ஒன்று அருகில் வசிக்கும் கருப்பசாமி (26) என்பவருக்கு சொந்தமான இடத்தில் குட்டிகளை ஈன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில், கருப்பசாமியின் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் படப்பையை நடராஜனின் பன்றி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடராஜனுக்கும் கருப்பசாமிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நடராஜனின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நடராஜன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நடராஜன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிஸ்வஜித் பாண்டா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சீவலப்பேரி போலீசாரும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நடராஜன் வளர்த்து வந்த பன்றி கருப்பசாமியின் வீட்டருகே இருந்த வைக்கோல் படப்பையை சேதப்படுத்தியதுடன், அப்பகுதியில் மண்ணையும் கிளறியதால் தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் திடீர் ஆத்திரத்தில் நடந்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்கனவே எந்தவித முன்விரோதமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு கருப்பசாமி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பன்றி குட்டிகளை ஈன்றது மற்றும் வைக்கோல் படப்பை சேதப்படுத்தியது தொடர்பான தகராறில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சீவலப்பேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.