திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 117 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 117 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 117 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் சுடலைமணிகண்டன் (25), மடத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்பாண்டி மகன் முத்துராமன் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், இருவர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து சுடலைமணிகண்டன் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 117 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.