திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 23 வயது வாலிபர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த 3 நண்பர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் அஸ்வின் (21). நெல்லை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையை நடத்தி வருகிறார். அவரது கடையில் கருங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (22), செய்துங்கநல்லூரைச் சேர்ந்த செல்வக்குமாரின் மகன் சிவா (23), கோபி (22) ஆகியோர் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கடையில் நீண்ட நேரம் வேலை செய்த நால்வரும், நள்ளிரவில் காரில் வீடு திரும்பினர். காரை அஸ்வின் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. நெல்லை-திருச்செந்தூர் சாலையில் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நால்வரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். அந்த வழியாகச் சென்றவர்கள் விபத்தை பார்த்து சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராபர்ட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.