தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலையும் மாலையும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 10-ம் நாளான இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், குமரவிடங்க பெருமான் வள்ளி மற்றும் தெய்வானை அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து திரண்டிருந்த பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தன.