திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தின்போது, பக்தர்களின் பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வரும் 15-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வைக் காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் தேவைக்காக சுமார் 300 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் வசதியாக கோவில் வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 11 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் தங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்காக 18004252077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த இடங்களில் என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் வரைபடங்களும் வைக்கப்பட்டுள்ளன. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது திருச்செந்தூர் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பக்தர்கள் திரள்வதால் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனைச் சமாளிக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் கூடுதலாக இரண்டு செல்போன் கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க விரிவான பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.