திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான, வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பிரமாண்ட பித்தளை மணி மீண்டும் ஒலிக்க உள்ளது.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 137 அடி உயரம் கொண்ட, 9 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம், கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.இந்த ராஜகோபுரத்தின் 9-வது நிலையில், 18-ம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பெரிய பித்தளை மணி பொருத்தப்பட்டுள்ளது. முருக பக்தரான கட்டபொம்மன் வாழ்ந்த 1760 முதல் 1799 வரையிலான காலத்தில், மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணி ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.திருச்செந்தூரில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு கோவில் மணியின் ஓசை நேரடியாக கேட்காது. இதனால், திருச்செந்தூர் கோவிலில் உச்சிக்கால பூஜை தொடங்கியதை அறிந்த பின்னரே பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரசக்கதேவிக்கு பூஜை செய்து, அதன் பிறகு மதிய உணவு அருந்துவார் என கூறப்படுகிறது.இதற்காக திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரையிலான பாதையில் 40 இடங்களில் மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டு, பெரிய மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் கோவிலில் மணி ஒலித்ததும், அருகிலுள்ள மணி மண்டபத்தில் இருந்த பணியாளர் அதைக் கேட்டு அங்குள்ள மணியை ஒலிக்கச் செய்வார். தொடர்ந்து அடுத்தடுத்த 39 மணி மண்டபங்களிலும் மணிகள் ஒலிக்கப்படும். இவ்வாறு மணியின் ஓசை பாஞ்சாலங்குறிச்சி வரை சென்றதாக கூறப்படுகிறது. இந்த மணி ஓசையை கேட்ட பிறகே கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரசக்கதேவிக்கு பூஜை செய்து வணங்கிவிட்டு மதிய உணவு சாப்பிடுவார் என வரலாறு தெரிவிக்கிறது.இத்தகைய சிறப்புமிக்க பாரம்பரியத்தை கொண்ட இந்த பிரமாண்ட மணி, பல ஆண்டுகளாக ஒலிக்காமல் இருந்தது. இதன் வரலாறு பக்தர்களுக்கு தெரியவந்த நிலையில், கட்டபொம்மனின் விருப்பத்தை நினைவுகூரும் வகையில் உச்சிக்கால பூஜையின்போது மணியை மீண்டும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2025-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ராட்சத பித்தளை மணி புதுப்பிக்கப்பட்டது.தற்போது ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணியை ஒலிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மணியுடன் இணைக்கப்பட்டுள்ள கயிற்றை 3 பணியாளர்கள் ஒன்றாக இழுத்து அசைத்தால்தான் மணி ஒலிக்கும். இதற்கான சோதனையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.உச்சிக்கால பூஜை நிறைவடையும் வரை சுமார் 5 நிமிடங்கள் இந்த மணி ஒலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 200 ஆண்டுகள் பழமையான வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி மீண்டும் திருச்செந்தூர் கோவிலில் ஒலிக்க உள்ள நிலையில், ஆவணி மாத திருவிழா காலத்திலேயே அதன் ஓசையை கேட்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.