திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மீன் வியாபாரம் செய்து வரும் கடைகளை ஆன்லைன் மூலம் ஏலம் விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் மீன் வியாபாரிகள் மீன்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மீன் அங்காடிகளில் உள்ள கடைகளை ஆன்லைன் முறையில் ஏலம் விட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தங்களது நீண்டகால வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பெண் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் மீன் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர். ஆன்லைன் ஏல அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், தாங்கள் வியாபாரம் செய்து வரும் மீன் கடைகளை தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பெண் வியாபாரிகள் மீன் கூடைகளுடன் திருச்செந்தூர் முக்கிய சாலைக்கு வந்தனர். தொடர்ந்து, தாங்கள் கொண்டு வந்த மீன்களை சாலையின் நடுவில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.