நடிகை திரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கும் இப்படம், மர்மம், திகில் மற்றும் பரபரப்பை உள்ளடக்கிய சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தி திரையுலகில் திரைப்படங்களை தயாரித்து வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறது. லோகோமோட்டிவ் குளோபல் மற்றும் பியூஷன் பிளிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படம் உருவாக்கப்படுகிறது. குமார் மங்கத் பாடக், அபிஷேக் பாடக், விகாஸ் சர்மா, அமித் டால்மியா மற்றும் சுந்தர் ஆரோன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.‘பாரா ஆனா’, அக்ஷய் குமார் நடித்த ‘ஏர்லிஃப்ட்’, சாய்ஃப் அலி கான் நடித்த ‘செஃப்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ணா மேனன், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், சைக்கலாஜிக்கல் ஹாரர் களத்தில் அவர் இயக்கும் முதல் படமாகவும் இது அமைகிறது.சமீபத்தில் நடைபெற்ற பூஜை விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட உள்ளன.திரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி என மூன்று முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இதுகுறித்து இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் கூறுகையில், எந்தவொரு குறிப்பிட்ட ஜானருக்குள்ளும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் கதைகளை தேர்வு செய்து இயக்கி வருவதாகவும், அந்தப் பயணத்தில் இந்தப் படம் மற்றொரு புதிய முயற்சி என்றும் தெரிவித்தார். தனது முதல் தமிழ் படமாகவும், த்ரிஷா, ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பாகவும் இப்படம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.படத்தின் கதைக்களம், நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.