கோவை விமான நிலையத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையும், மகனும் தங்களது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது; தொடர்ந்து தோல்வியையே சந்திக்கும். மு.க.ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். விரக்தியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர். திமுகவினர் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும். மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தங்களது வக்கிரமான பேச்சுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பட்டியலின பெண் குறித்து ஸ்டாலின் தரக்குறைவாக பேசியுள்ளார். அவரது பேச்சு மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. தவெக பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததற்காக ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. திமுகவினர் தெரிவிக்கும் தவறான தகவல்களையே பெ.சண்முகம் பேசி வருகிறார். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறினால், அதனை பெ.சண்முகம் நிரூபிக்க வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு இனி ஒருபோதும் தேர்தல் வெற்றி கிடைக்காது. எதிர்காலத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகும்” என்றார். முன்னதாக, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார்.