திமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியின்போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், கடந்த அக்டோபர் 26-ம் தேதி முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, போலீசார் அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்ததும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், தனது கட்சிக்காரருக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வாதிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் முதலில் ரூ.100 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகார், பின்னர் ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.800 கோடி என வெவ்வேறு தொகைகளாக மாற்றிக் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். பணம் கொடுத்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அன்பில் மகேஷின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை போலீசார் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளதால், ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் வாதிட்டார். மேலும், அவர் தலைமறைவாக மாட்டார் என்றும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார் மற்றும் அரசகுமார் ஆகியோருடன் அன்பில் மகேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறினார். மேலும், முத்துக்குமார் வசூலித்த பணத்தை சரவணன் என்பவர் அன்பில் மகேஷின் வீட்டிற்குக் கொண்டு சென்றதாகவும், இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல், அன்பில் மகேஷிடம் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரசுத் தரப்பு வலியுறுத்தியது. இருதரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 5-ம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று மனு மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்திலேயே இருப்பதாகக் காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கடந்த 16 நாட்களாக புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஷிடம், ஏற்கெனவே மூன்று நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.