பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கடந்த மே 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற தாங்கள், ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதற்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகரில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் நவீன நூலகம் அமைக்கப்பட்டது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.300 கோடி செலவில், ஏழு தளங்களுடன் கட்டப்பட்ட இந்த நூலகத்தை கடந்த அக்டோபர் 16-ந்தேதி தாங்கள் திறந்து வைத்தீர்கள். ஒரு ஆட்சியில் தொடங்கப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த திட்டங்கள் அடுத்த ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன்பும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சியிலும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தாங்கள் திறந்து வைத்தீர்கள். ஆனால், திறப்பு விழாவில் இதுகுறித்து பேசவில்லை என்று தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே, முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 4-ந்தேதி கோவை சென்று நூலகத்தைப் பார்வையிட்டார். மாலையில் அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. எந்தத் திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருந்ததில்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். பள்ளிக்கல்வித் துறையில் பெரும் ஊழல் செய்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில், பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் அறிவுலகத்தின் நான்காவது தளத்தில் ‘அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்டதாகக் கூறப்படும் சுமார் 1,800 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் போலியானவை என்றும், அந்நூல்களை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உண்மையான எழுத்தாளர்கள் அல்ல என்றும் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுவாக, 300 பக்கங்கள் கொண்ட நூல்களுக்கு முன்னணி பதிப்பகங்கள் ரூ.300 முதல் ரூ.400 வரைதான் விலை நிர்ணயிக்கின்றன. வெளிநாடுகளில் அச்சிட்டு வெளியிடப்படும் புத்தகங்களுக்குக்கூட இதைவிட அதிக விலை கிடைப்பதில்லை. ஆனால், அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூல்களுக்கு ரூ.1,400-க்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலியான நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியுள்ளார். கீழடி அகழாய்வில் நந்தி கண்டெடுக்கப்பட்டதாகப் படத்துடன் ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மகாகவி பாரதியாரின் படைப்புகளைப் போலவே போலியாக எழுதப்பட்ட நூலும் இடம்பெற்றுள்ளது. நூல்களை வாங்குவதிலேயே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்கும்போது, நூலகக் கட்டிடத்தை உருவாக்கியதில் எந்த அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கும் என்ற அச்சம் எழுகிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து, போலியான நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களை மூன்று முதல் நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற நூலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய நூலகங்களில் ஊழல் செய்தவர்கள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு துரோகம் செய்த பெரும் கொள்ளையர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. திராவிடம் பேசுவது கொள்ளையடிப்பதற்காகத்தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.” இவ்வாறு மாணிக்கம் தாகூர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.