திமுக அமைப்பில் அதிரடி மாற்றங்கள்: 110 மாவட்டக் கழகங்கள் உருவாக்க முடிவு; 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திமுக அமைப்பில் அதிரடி மாற்றங்கள்: 110 மாவட்டக் கழகங்கள் உருவாக்க முடிவு; 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக அமைப்பில் அதிரடி மாற்றங்கள்: 110 மாவட்டக் கழகங்கள் உருவாக்க முடிவு; 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சியின் மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்தகட்ட அமைப்பு மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 15 முறை அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 16-வது அமைப்புத் தேர்தலை நடத்தி, நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ள இந்தத் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, கட்சியின் அடிப்படை அமைப்பான கிளைக் கழகங்களில் புதிய மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரே அந்தப் பொறுப்பில் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே தொடர முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மாநகர பகுதிகளில் தற்போது உள்ள வட்டக் கழகங்களுடன் கூடுதலாக புதிய கிளைக் கழக அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த அமைப்பு தொடங்கப்படும். பிற மாநகராட்சிகளிலும் தேவைக்கேற்ப இதேபோன்ற அமைப்புகளை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாநகரங்களில் உருவாக்கப்படும் வட்டக் கழகங்களின் அளவிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வட்டக் கழகம் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகரங்களில் 5 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பொறுப்பை இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பேரூர்க் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பிலும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே செயல்பட முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகரங்களில் செயல்படும் பகுதிக் கழகங்களும் மறுசீரமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களையும், மற்ற மாநகரங்களில் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பகுதிக் கழகச் செயலாளர்களின் வயது வரம்பும் 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நகரக் கழகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய வகையில் நகரக் கழகங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரச் செயலாளரின் அதிகபட்ச வயதும் 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை ஒருவர் இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும். ஒன்றியக் கழகங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியக் கழகச் செயலாளரின் வயது வரம்பு 60 ஆகவும், பதவிக்கால வரம்பு இரண்டு முறையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படையாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும், ஒரு ஊராட்சி இரு கழக ஒன்றியங்களாகப் பிரிக்கப்படக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள 77 மாவட்டக் கழகங்கள், மறுசீரமைப்புக்குப் பிறகு 110 ஆக உயர்த்தப்பட உள்ளன. வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்ட அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு தொகுதி மட்டும் மீதமிருந்தால், அது அருகிலுள்ள பொருத்தமான கழக மாவட்டத்துடன் இணைக்கப்படும்.மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாவட்டச் செயலாளர் பதவியில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே இருக்க முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புதிய 110 மாவட்டக் கழகங்களுக்கான சட்டமன்றத் தொகுதி விவரங்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்குழுக் கூட்டம் நடத்தி, தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வட்டம், கிளை ஆகிய அமைப்புகளை 15 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பு மாற்றங்கள் மூலம் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.