திண்டுக்கல்: விவசாயி அடித்துக் கொலை - மனைவி மீது பழி சுமத்திய மகன் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திண்டுக்கல்: விவசாயி அடித்துக் கொலை - மனைவி மீது பழி சுமத்திய மகன் கைது

திண்டுக்கல்: விவசாயி அடித்துக் கொலை - மனைவி மீது பழி சுமத்திய மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, மதுபோதையில் தந்தையை மரக்கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, அந்தக் கொலையை தனது மனைவி செய்ததாகக் கூறி நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். வடமதுரை பி.கோசவபட்டி அருகேயுள்ள சிக்குபோலகவுண்டன்பட்டி தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் விவசாயி ஊமைச்சாமி என்ற பெருமாள் (60). இவரது மகன் முத்தையா (30), ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். முத்தையா, நந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முத்தையா மற்றும் நந்தினி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நந்தினி, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன்புதான் அவரை முத்தையா சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24-ந்தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த முத்தையா, நந்தினியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். இதனால் அச்சமடைந்த நந்தினி, உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றார். மனைவியை முத்தையா தாக்கியதை பார்த்த அவரது தந்தை பெருமாள், மகனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா, அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து பெருமாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய பெருமாளை முத்தையாவே மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து, தனது தந்தையை மனைவி நந்தினிதான் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாக முத்தையா போலீசாரிடம் கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீசார், பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நந்தினி மற்றும் முத்தையாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மதுபோதையில் தந்தையை முத்தையாவே தாக்கி கொலை செய்ததும், பின்னர் நந்தினி மீது பழி சுமத்தி தவறான தகவல் அளித்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முத்தையாவை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.