திடீர் வெள்ளப்பெருக்கு: உருக்குலைந்த நேபாளம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திடீர் வெள்ளப்பெருக்கு: உருக்குலைந்த நேபாளம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு

திடீர் வெள்ளப்பெருக்கு: உருக்குலைந்த நேபாளம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு

வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து எல்லை நதியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரிடரில் இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்டவை பெரும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவாகடி, நேபாளம்-திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.திபெத் இமயமலை பகுதியில் உருவாகும் லெண்டே கோலா ஆறு, நேபாளம்-திபெத் எல்லை வழியாக ரசுவாகடியை வந்தடைகிறது. அங்கு இந்த ஆற்றுடன் சில சிறிய ஆறுகள் இணைந்து, போடேகோஷி என்ற ஆறாக கீழ்நோக்கி செல்கின்றன.இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ரசுவா மற்றும் அருகிலுள்ள நுவாகோட் மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.டிமுரே, சியாப்ருபேசி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 60 வீடுகள் முழுமையாக வெள்ளத்தில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், அங்கிருந்து சீன எல்லையை இணைக்கும் 42 கிலோ மீட்டர் நீள சாலைகள் முற்றிலும் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வெள்ளத்தின் தாக்கத்தால் மின்கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டன. தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவத்தினரும் போலீசாரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களுடன் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், பல இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலமாகவே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை வெள்ளத்தில் உயிரிழந்த 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பது மீட்பு நடவடிக்கைகளுக்கு சவாலாக உள்ளது. கைலாஷ் மானசரோவர் பயணிகளும் பாதிப்புவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரசுவா பகுதி, இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் சென்று, அங்கிருந்து திபெத்தின் கெய்ருங் எல்லை வழியாக கைலாஷ் மானசரோவருக்குச் செல்லும் பயணிகள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.நேற்று திபெத்துக்குச் செல்ல திட்டமிட்டு ஏராளமான பக்தர்கள் ரசுவாகடியில் தங்கியிருந்தனர். வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் அவர்களில் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்துக்குப் பிறகு சுமார் 500 சுற்றுலா பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர்; 32 பேர் பாதுகாப்புப் படையினர்.வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் உள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர்.அவர்களில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 37 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தமிழக அரசு உதவி மையம் தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளில் இருந்து +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண் 9289516712 ஆகும். இந்திய அரசும் மீட்பு நடவடிக்கையில் தீவிரம் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை விரைவாக மீட்பதுடன், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய விமானப்படையும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.இதனிடையே, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவு மற்றும் இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.