திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்

திடீர் மாரடைப்பு.. பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்

25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலும் பஸ்சை கட்டுப்பாட்டுடன் இயக்கி சாலையோரம் நிறுத்தி பயணிகளை பாதுகாத்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே உள்ள தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (59). அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்த இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி பேபி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 8 மணியளவில் பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி செல்லும் அரசு பஸ்சை வெங்கடசாமி ஓட்டிச் சென்றார். இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள புதிய பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது வெங்கடசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலும் அவர் பஸ்சை வேகமாக இயக்காமல் கட்டுப்பாட்டுடன் மெதுவாக ஓட்டி சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து பயணிகள் வெங்கடசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சென்றிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும், கெங்கையம்மன் பாலத்தை இடித்துக்கொண்டு ஆற்றில் பஸ் விழும் அபாயமும் இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், ஆபத்தான நிலையிலும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெங்கடசாமி பஸ்சை மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் இயக்கி சாலையோரம் நிறுத்தியதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.