நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘தசரா’. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நானியின் 33-வது படமாக ‘தி பாரடைஸ்’ உருவாகியுள்ளது. இப்படத்தையும் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள நிலையில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘தசரா’ படத்தைப் போலவே, ‘தி பாரடைஸ்’ படத்திலும் நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே, ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘தி பாரடைஸ்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளதை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ‘யேஷானகுலா’ பாடல் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதனுடன் வெளியிட்ட பதிவில், நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் கடின உழைப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘ஜடால்’ உலகத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அவர்களின் முயற்சியைப் பாராட்டியுள்ளார். மேலும், ‘தசரா’ படக்குழுவினருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனிருத் இசையமைத்த ‘யேஷானகுலா’ பாடல் தனித்துவமான உற்சாகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் காட்டிய அன்புக்கும், தன்னுடைய ‘லங்கவோனி’ தோற்றத்தை அழகாக மீண்டும் உருவாக்கியதற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.