தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் களமிறங்குகின்றனர். மதுராந்தகம் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் த.வெ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், முதற்கட்சியாக தி.மு.க. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கியமான மூன்று கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுராந்தகம் தொகுதி: கடந்த தேர்தல் நிலவரம் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேலும், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரினும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் களமிறங்கினர். மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகள் பதிவான நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7,194 ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்றார். தாராபுரம் தொகுதி: கடந்த தேர்தல் முடிவுகள் தாராபுரம் (தனி) தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர்.மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகள் பதிவாகின. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இருவருக்கும் இடையே 16,727 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றனர்.