திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 15 ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் அறிவுறுத்தலின்படி, த.வெ.க. பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் எம்.எல்.ஏ., இன்று (26.09.2026) சனிக்கிழமை தாராபுரம் அருகே உள்ள மருதூர் பகுதியில் 15 ஊராட்சிகளுக்கு உட்பட்ட விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாசா சேதுபதி, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், மதுரை தெற்கு எம்.எல்.ஏ. கோபிசன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் உடனிருந்தனர். தொடர்ந்து, மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர் என்.ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.