வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச பேஷன் விழாவில், தாய்மை மற்றும் பிரசவத்தின்போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஆடை, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததுடன், "சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்" விருதையும் பெற்றுள்ளது.73-வது உலக அழகிப் போட்டி கடந்த மாதம் 8-ந்தேதி வியட்நாமில் தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். போட்டியின் இறுதிக்கட்ட நிகழ்ச்சி, வியட்நாமின் நா டிராங் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'தோ தியேட்டர்' அரங்கில் இன்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உகாண்டாவைச் சேர்ந்த அழகி முஹோசா டிரிவியா எல் அணிந்து வந்த "தி லேயர்ஸ் ஆப் லைப்" என்ற கவுன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.பிரபல ஆடை வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா இந்த ஆடையை வடிவமைத்துள்ளார். சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, மருத்துவர்கள் பெண்ணின் உடலின் வெளிப்புறத் தோல் முதல் கருப்பை வரையிலான பல்வேறு உடற்கூறியல் அடுக்குகளைக் கடந்து செல்கின்றனர். அந்த ஒவ்வொரு அடுக்கையும் பிரதிபலிக்கும் விதமாக இந்த ஆடை நுட்பமாக பல அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.பிரசவத்துக்காக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையையும், அதனுடன் தொடர்புடைய வலியையும் கலை வடிவில் வெளிப்படுத்திய இந்த ஆடை, ஒரு புதிய உயிரை உலகிற்கு கொண்டு வர தாய்மார்கள் செய்யும் தியாகத்தை எடுத்துக்காட்டியது.இந்த தனித்துவமான வடிவமைப்பையும் அதன் கருத்தையும் பாராட்டிய நடுவர் குழு, ஆடைக்கு "சிறந்த உலக ஆடை வடிவமைப்பாளர்" விருதை வழங்கியது. பல நாடுகளின் பாரம்பரிய மற்றும் கலாச்சார ஆடைகள் இடம்பெற்ற இந்த சர்வதேச விழாவில், தாய்மையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உகாண்டா அழகியின் இந்த ஆடை சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.