தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்தத் திட்டம் வெறும் பரிசை வழங்கும் முயற்சி அல்ல என்றும், குடும்பத்தின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் அடையாளம் என்றும் கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குழந்தையின் பிறப்பு ஒரு குடும்பத்திற்கு புதிய நம்பிக்கையின் தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில், பிறந்த குழந்தையின் விரலில் தங்க மோதிரத்தை அணிவிப்பது, அந்தக் குழந்தை குடும்பத்தின் செல்வம் என்பதை வெளிப்படுத்தும் அன்பின் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாய்மாமன் உறவின் பாசத்தையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் மக்கள் நல சிந்தனை பாராட்டுக்குரியது என கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகளை மட்டுமின்றி, அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் நல்லாட்சியின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையின் பிறப்பைச் சுற்றியுள்ள குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் பாசத்திலும் அரசையும் இணைக்கும் இந்த முயற்சி, மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்த தலைமைத்துவத்தின் வெளிப்பாடு என்றும் தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.