தாம்பரம் ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ பழுதால் ரூ.500 கொடுத்து டிராலியில் சென்ற மூதாட்டி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ பழுதால் ரூ.500 கொடுத்து டிராலியில் சென்ற மூதாட்டி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ பழுதால் ரூ.500 கொடுத்து டிராலியில் சென்ற மூதாட்டி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ செயல்படாததால், முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்திருந்த மூதாட்டி ஒருவர் நடைமேடைக்கு செல்ல ரூ.500 கொடுத்து டிராலியில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்–செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதற்காக மூதாட்டி ஒருவர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்திருந்ததுடன், கடுமையான முழங்கால் வலியாலும் அவதிப்பட்டு வந்ததால் அவரால் படிக்கட்டுகளில் ஏறி செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் சக்கர நாற்காலி, மின்சார வாகனம் அல்லது லிப்ட் போன்ற மாற்று வசதிகள் இருக்கும் என குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நடைமேடைக்கு செல்லும் லிப்ட் பழுதடைந்திருந்ததால் மூதாட்டியை 10-வது நடைமேடைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பணியாளரிடம் உதவி கேட்டுள்ளனர். உடைமைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டிராலியில் மூதாட்டியை அமர வைத்து நடைமேடைக்கு அழைத்துச் செல்ல ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது. வேறு வழியின்றி அந்த தொகையை வழங்கி டிராலி மூலம் மூதாட்டியை நடைமேடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மூதாட்டியின் மகளும், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீவித்யா கூறுகையில், ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது, லிப்ட்டை சீரமைக்க மேலும் 2 மாதங்கள் ஆகும் என பதிலளித்ததாக தெரிவித்தார். சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், புதிய மேம்பாலப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக பேட்டரி கார், மோட்டார் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.