தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில், மின் இணைப்பு தொடர்பான பணியை செய்து தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மின்வாரிய உதவி பொறியாளர் சந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சிவசெல்வன் (47), தனது தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த ஜூலை 9-ம் தேதி கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்தியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டின் மின் திறனை 1 கே.வி.யில் இருந்து 3 கே.வி.யாக உயர்த்தக் கோரி கடந்த மாதம் 10-ம் தேதி சிவசெல்வன் மீண்டும் விண்ணப்பித்தார். இந்தப் பணியை செய்து தருவதற்காக மின்வாரிய உதவி பொறியாளர் சந்திரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்தத் தொகையை ரூ.7 ஆயிரமாக குறைத்ததாகவும் தெரிகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசெல்வன், இதுகுறித்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ.7 ஆயிரத்தை போலீசார் அவரிடம் கொடுத்து அனுப்பினர்.சிவசெல்வன் பணத்துடன் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்றபோது சந்திரன் அங்கு இல்லை. இதையடுத்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு வருமாறு சந்திரன் கூறியதாக தெரிகிறது.அதன்படி அங்கு சென்ற சிவசெல்வன், சந்திரனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12,540 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.