தமிழக அரசியலில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., த.வெ.க. கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவியது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையாக பெறவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. 107 தொகுதிகளுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 என மொத்தம் 13 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதற்கிடையே, காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றாலும், சட்டசபையில் அக்கட்சியின் எண்ணிக்கை 109 ஆக மட்டுமே உயரும். மீதமுள்ள 5 தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ஆட்சி பலத்தை உறுதி செய்ய மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உள்ளது. இதற்கிடையில், த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தாங்கள் த.வெ.க. கூட்டணியில் இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளன. மேலும், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவையும் அவை அறிவித்துள்ளதால், எதிர்காலத்தில் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும் சூழல் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் சூழலில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பகட்டத்தில் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது ஒப்பீட்டளவில் அமைதியான அணுகுமுறையை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இது இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் த.வெ.க. அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அமைச்சர்கள் மாற்றப்படுவதுடன், குறிப்பிட்ட அமைச்சர்களிடம் உள்ள இலாகாக்களும் மறுசீரமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றங்களுக்கு முன்பாக பா.ம.க. த.வெ.க. கூட்டணியில் இணைந்தால், அக்கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ம.க. த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அவர் மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அவையில் எடுத்துரைத்த விதம் பாராட்டைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுமியா அன்புமணிக்கு பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.