வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல், மாநில அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் ஏமாற்றத்தை அளித்தது. அதேநேரத்தில், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை கைப்பற்றிய த.வெ.க.வுக்கு எதிர்பாராத வெற்றியாகவும், அ.தி.மு.க.வுக்கு பின்னடைவாகவும் அமைந்தது.மேலும், தேர்தலுக்கு முன்பு ஒரு அணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு வேறு கூட்டணிக்கு மாறிய அரசியல் சூழலும் உருவானது. அந்த வகையில், ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் த.வெ.க.வுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கைகோர்த்தன.இந்த கூட்டணியை தற்போதைய ஆட்சிக்கான ஆதரவு அணியாக மட்டுமின்றி, அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலான அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற அந்த கூட்டத்துக்கு, முதல்-அமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.அப்போது கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது, பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில், த.வெ.க. ஆதரவு கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் திருமாவளவன் பங்கேற்கும் வகையில் அவருக்கு நேரில்அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.இதற்காக சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் நேரில் சென்று திருமாவளவனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.