திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தி.மு.க.வின் நிலைப்பாட்டில் தற்போது குழப்பம் காணப்படுகிறது. அந்தக் கட்சியினர் மீது சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன. தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், அ.தி.மு.க.வில் 32-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். அவர்களும் துரோகம் செய்ததாக கருதுகிறாரா? தற்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ரகசிய உடன்பாட்டுடன் செயல்பட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தன. எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்காக பல கோடி ரூபாயை தயாராக வைத்திருந்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்க அவர் முயன்றார். துரோகத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி தொகுதியில் ரூ.25 கோடி கொடுத்து த.வெ.க. வேட்பாளரை விலைக்கு வாங்கியுள்ளார். அங்கு எங்களது வேட்பாளர் போட்டியிட்டிருந்தால், எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இதுதான் எடப்பாடி பழனிசாமியின் துரோக வரலாறு” என்று அருண்ராஜ் தெரிவித்தார்.