கோவை காந்திபுரத்தில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மாதம் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ய ரூ.50 கோடியும், மின்னணு புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பெரியார் நூலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் போலியான பதிப்பகங்கள் வாயிலாக வாங்கப்பட்டதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகங்களின் முன்னுரைகள் எழுதப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், சில புத்தகங்களில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர்களின் பெயர்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். புத்தகங்கள் மற்றும் அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தி.மு.க. தொடர்ந்து மறுத்து வருகிறது. புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை: அமைச்சர் ராஜ்மோகன் இந்நிலையில், சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் மற்றும் பெரியார் நூலக விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “த.வெ.க. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை நூலகங்களுக்காக ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை. தமிழகத்தில் தற்போது நூலகங்களில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சிக் காலங்களில் வாங்கப்பட்டவைதான். அகல்விளக்கு பதிப்பகம் முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்பது தொடர்பாக கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) விசாரித்து வருகிறது. நூலகங்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு புதிய குழு அமைக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழுவை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள் இடம்பெறும் சிறப்புக் குழு அமைத்து, அதன் மூலம் நூலகங்களுக்கான புத்தகங்கள் வாங்கப்படும். தி.மு.க. ஆட்சியில் நூலகங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் இமாலய ஊழலாகத் தெரிகின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி கலைஞர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த போலியான ஆய்வு நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்தில்கூட 523 போலி புத்தகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களில் சிக்குகின்ற த.வெ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது சட்டப்படி விசாரணையும் நடத்தப்படுகிறது. தொகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது எழுந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறைக்கு முன்பைவிட அதிக சுதந்திரம் வழங்கியுள்ளோம். குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்களை ஒப்பிட்டு அவற்றை நியாயப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.