தவணைத் தொகை செலுத்தாத வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டித் தள்ளுபடி: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தவணைத் தொகை செலுத்தாத வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டித் தள்ளுபடி: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தவணைத் தொகை செலுத்தாத வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டித் தள்ளுபடி: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைமுறைக் கொள்முதல் திட்டத்தில் வீடு, மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பெற்று, தவணைக் காலம் முடிந்தும் நிலுவைத் தொகையைச் செலுத்தாதவர்களுக்கு வட்டிச் சலுகை வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைமுறைக் கொள்முதல் திட்டத்தின் கீழ் வீடு, மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற்றவர்களில், தவணைக் காலம் நிறைவடைந்தும் முழுத் தொகையையும் செலுத்தாததால் விற்பனைப் பத்திரம் பெற முடியாமல் சுமார் 6,496 பேர் உள்ளனர். இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விற்பனைப் பத்திரம் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தால் கூடுதல் வட்டிச் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கவும் வட்டித் தள்ளுபடி வழங்கப்படும் என 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களில் நிலுவைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள், தங்களது நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். இதன்படி, நிலுவைத் தொகைக்கு விதிக்கப்பட்ட அபராத வட்டி மற்றும் வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். மேலும், நிலத்தின் இறுதி விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட வித்தியாசத் தொகைக்கு வசூலிக்கப்படும் வட்டியிலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் பயனாளர்களுக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்படும். இந்தச் சிறப்புத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சலுகையின் மூலம் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயனடைவார்கள். இதன் வாயிலாக வீட்டுவசதி வாரியத்திற்கு சுமார் ரூ.92.39 கோடி வருவாய் கிடைக்கும். அதேநேரத்தில், ஒதுக்கீடுதாரர்களுக்கு ரூ.18.45 கோடி அளவிற்கு வட்டித் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.