தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷி கன்னாவுக்கு, இயல்பான நடிப்புக்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’திரைப்படத்தில் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, ராஷி கன்னா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷி கன்னாவிடம், ரசிகர் ஒருவர் “தலைவருடன் பணியாற்றியது எப்படி இருந்தது?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். தற்போது ரஜினிகாந்த் தனது நண்பராகிவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், தான் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டாலும் ரஜினிகாந்த் புன்னகையுடன் பொறுமையாக பதிலளிப்பார் என்றும், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் ராஷி கன்னா தெரிவித்துள்ளார். அவ்வப்போது தன்னை ரஜினிகாந்த் கேலி செய்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு மிகவும் பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் எனக் கூறியுள்ள ராஷி கன்னா, அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.