தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. மேலும், சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவர் சில முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், SIR விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணி, நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலரை போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, போலீசாரின் தடையை மீறி ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆகாஷ்வாணி பவனுக்குள் சென்றனர். அங்குள்ள வானொலி அலுவலகத்திலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய இந்த போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.