கர்நாடகாவில், குடும்பத் தகராறால் மனமுடைந்து ஆற்றில் குதித்த பெண் ஒருவரை முதலை கடித்ததால், அவர் உயிர் பிழைக்கப் போராடி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் ரேகா (38). திருமணமான இவர், தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது கோவிலுக்கு அருகே ரேகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே திடீரென குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரேகா, வாழ்க்கையில் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, புதன்கிழமை இரவு குமாரதாரா பாலத்தின் மீது ஏறிய அவர், அங்கிருந்து ஆற்றுக்குள் குதித்தார். இரவு நேரம் என்பதால் ஆற்றில் இருள் சூழ்ந்திருந்தது. ரேகா ஆற்றில் விழுந்த சிறிது நேரத்திலேயே, அங்கு பதுங்கியிருந்த முதலை ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து கடித்தது. ஆற்றில் குதித்தபோது உயிரை விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரேகா, முதலை கடித்ததும் ஏற்பட்ட அச்சத்தில் தப்பிக்கப் போராடினார். இதனால் அவர் "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..." என்று அலறினார். நள்ளிரவில் ஆற்றுப்பகுதியில் இருந்து கேட்ட பெண்ணின் கூச்சலைக் கேட்ட அருகிலிருந்த தனியார் விடுதி ஊழியர்களும் பொதுமக்களும் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து சுப்ரமண்யா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் பொதுமக்களும் இணைந்து ஆற்றுக்குள் கற்களை வீசி முதலையை விரட்டினர். தொடர்ந்து, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ரேகாவை கயிற்றின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட எஸ்.பி. அருண் கூறுகையில், முதலை சிறியதாக இருந்ததால் ரேகா லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தற்கொலை எண்ணத்தில் ஆற்றில் குதித்த பெண், முதலை கடித்ததால் ஏற்பட்ட அச்சத்தில் உதவி கேட்டு அலறியதும், பொதுமக்கள் அவரை மீட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.