திறந்தவெளி அணுகல் (Open Access) அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சில நாளிதழ்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ‘திறந்தவெளி நுழைவுரிமை’ அனுமதிகளை மாநில மின்சுமை பகிர்மான மையம் நிறுத்தி வைத்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திடம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட 3 வேலை நாட்களுக்குள் தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திறந்தவெளி நுழைவுரிமை அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதி பெற்ற தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்பட்ட எந்த விண்ணப்பமும் தற்போது நிலுவையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 289 உயர் மின்னழுத்த (HT) நுகர்வோருக்கு மொத்தம் 1,373 மெகாவாட் அளவிலான நிலையான திறந்தவெளி நுழைவுரிமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூன் மாதத்தில் 383 உயர் மின்னழுத்த நுகர்வோருக்கு 1,752 மெகாவாட், ஜூலை மாதத்தில் 372 நுகர்வோருக்கு 1,729 மெகாவாட், ஆகஸ்ட் மாதத்தில் 299 நுகர்வோருக்கு 1,477 மெகாவாட் அளவிலும் நிலையான அனுமதிகள் வழங்கப்பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாத 87 விண்ணப்பதாரர்களின் 334 மெகாவாட் அளவிலான விண்ணப்பங்களுக்கு மட்டுமே திறந்தவெளி நுழைவுரிமை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் நிறைவு செய்யப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திட்டங்களுக்கான மின் தொகுப்பு இணைப்பு தொடர்பான நிலுவை விண்ணப்பங்களும் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2026 மே மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 840 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.