நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ஆகாஷ் காஸ்டியூம்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘தர்மன்’ படப்பிடிப்பில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், நடிகர் அட்டை பெற ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதன் மூலம் ரூ.18 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மோசடி நடைபெற்றதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த பதிவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இதுபோன்ற முறையில் இதுவரை எத்தனை பேர் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.