திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (செப்டம்பர் 30) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான விஜய் கலந்து கொண்டு, வேட்பாளர் பி. சத்தியபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய இரு தனித்தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் நா.த.க. என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, விஜய் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அந்த தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் பிரசாரம் செய்திருந்தார். அடுத்தகட்டமாக, தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் பி. சத்தியபாமாவுக்கு ஆதரவாக நாளை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்ற உள்ளார். இதற்காக தாராபுரம்-உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பந்தல் மற்றும் பிரசார மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரசார மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த், இன்று (செப்டம்பர் 29) தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பி. சத்தியபாமாவை ஆதரித்து விஜய் பேச உள்ள இடத்தை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விஜய் கோவையில் இருந்து சாலை வழியாக தாராபுரத்துக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதி பிரசார நாளான அக்டோபர் 4-ந்தேதி விஜய் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.