மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு மற்றும் முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோவிலில் பிரசாதங்களை விற்பனை செய்வதற்காக 3 இடங்களில் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக சர்க்கரை பொங்கல் (100 கிராம்), புளியோதரை (100 கிராம்), வடை (50 கிராம்), அப்பம் (50 கிராம்), லட்டு (50 கிராம்), முறுக்கு (50 கிராம்) ஆகியவை தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் பிரசாதங்களின் விலை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிராம் லட்டின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 50 கிராம் முறுக்கின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 50 கிராம் எடை கொண்ட மெதுவடை இனி மிளகு வடையாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையும் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 100 கிராம் எடை கொண்ட புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கலின் அளவு தலா 150 கிராமாக அதிகரிக்கப்பட்டதுடன், அவற்றின் விலையும் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செல்வி கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரசாதங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரசாதங்களில் எள், ஓமம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, தரம் மற்றும் சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, நிர்ணயிக்கப்பட்ட எடையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார். விலை உயர்வு குறித்து பக்தர்கள் கூறுகையில், கோவிலுக்கு வந்து சென்றதன் நினைவாகவும், கோவிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் சுவையாகவும் தரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக பிரசாதங்களை வாங்கிச் செல்வதாக தெரிவித்தனர். குறைந்த விலையில் கிடைத்து வந்ததால் கூடுதலாக வாங்கிச் சென்ற நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.