திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 2025 டிசம்பர் 1 அன்று, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடங்களுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணையின் போது, தொடர்புடைய ஆவணங்களை மொழிபெயர்க்க தாமதமானதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த காரணத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.விசாரணையின் போது நீதிபதிகள், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான அனைத்து மனுக்களையும் முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஜனவரி மாதமே உத்தரவிட்டிருந்த நிலையில், ஆறு மாதங்கள் கழித்து மேல்முறையீடு செய்ய காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கடந்த 150 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டு வருவதாகவும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கோவில் ஆவணங்கள், முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் அல்லது ஆகமங்களில் இல்லாத வழிபாட்டு முறையை உயர்நீதிமன்றம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு உரிமை என்பது, பொதுக் கோவில்களில் நிலவும் சடங்கு முறைகளை மாற்றும் உரிமையாக கருத முடியாது என்றும், சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் தொடர்பான மத நிறுவனங்களின் சுயாதீன செயல்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றும் தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.