திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். ஆம்பூர் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 மாணவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சென்னை–பெங்களூரு சாலையில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.