பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில், அவரை சந்திக்க வருபவர்கள் அரசியல் குறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள இந்தப் பலகையில், ‘அரசியல் துறவறம்’என்ற தலைப்பின் கீழ் பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், அன்றுமுதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். மேலும், அரசியல் குறித்து பேசவோ, அதற்கு வழிகாட்டவோ மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார்.இந்நிலையில், அவரை சந்திக்க வருபவர்களில் சிலர் அரசியல் தொடர்பான விஷயங்களை பேச முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால், இல்லத்தின் நுழைவு வாயில் பகுதியில் தற்போது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில், தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமதாசை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், சந்திக்க வரும் பார்வையாளர்கள் “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.