தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய், முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 2026-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த தகுதியான குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், மருத்துவமனையின் பிரசவ வார்டு மற்றும் தாய்-சேய் நலப் பிரிவுக்குச் சென்ற விஜய், அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடம் நலம் விசாரித்தார். போஸ் வெங்கட் விமர்சனம் இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஒரு தலைமுறைக்கே பயனளிக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக ‘நான் முதல்வன்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் யாருக்கு என்ன பயன் அளிக்கும் என்றும், இது வெறும் கவர்ச்சி திட்டமாகவும் மக்களை ஏமாற்றும் திட்டமாகவும் இருப்பதாகவும் போஸ் வெங்கட் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து மக்கள் விழிப்புடன் சிந்திப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.