இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அது தம்பதிகளின் உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால்,திருமணத்துக்குப் பிறகு சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வரும் அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே நேரத்தில் தனது குடும்ப வாழ்க்கையையும் கவனித்து வருகிறார். சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு குறித்து பேசிய காஜல் அகர்வால், இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்து வருவதாகக் கூறியுள்ளார். குறிப்பாக கணவன்-மனைவி இடையேயான பொறுமையின்மைக்கும் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் அதிக பயன்பாடு ஒரு காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தம்பதிகள் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தும்போதுகூட, ஒருவருடன் ஒருவர் பேசாமல் செல்போனில் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பழக்கம் கணவன்-மனைவிக்கிடையேயான உரையாடலையும் நெருக்கத்தையும் குறைத்து, காலப்போக்கில் உறவில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும் என்றும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். எனவே, செல்போன் பயன்பாடு தம்பதிகளின் உறவில் ஏற்படுத்தும் தாக்கத்தை அனைவரும் புரிந்துகொண்டு, அதில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது சொந்த குடும்ப வாழ்க்கை குறித்தும் பகிர்ந்துகொண்ட காஜல் அகர்வால், வாரத்தில் ஒரு நாளை செல்போன் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைத்து, கணவருடன் வெளியே சென்று நேரத்தை செலவிடுவதாக தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இருவரும் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.