விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும் அச்சமின்றி, கம்பீரத்துடன் நடைபோட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் துணிச்சலை நினைவுகூர்ந்துள்ளார். தன்மானத்தையே முதன்மையாகக் கருதி வாழ்ந்த அவர், அந்நிய ஆட்சிக்கு எதிரான உணர்வை மக்களின் மனங்களில் விதைத்ததாகக் குறிப்பிட்டு, அவரது வீரத்துக்கு தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் – கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தன்மானத்தைக் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.