சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மாநிலத்தின் மின்சார நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், மதுரை கோவிலில் இதுவரை தான் தரிசனம் செய்யவில்லை என்றும், கும்பாபிஷேக விழாவில் தான் எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும் தெரிவித்தார். தனது சார்பில் குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்கவில்லை எனவும் கூறினார். பொதுமக்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாஸ் வழங்கப்பட்டதாகவும், அந்த பாஸ் எந்த நிறத்தில் இருக்கும் என்பது கூட விழாவுக்கு முந்தைய நாளில்தான் தனக்கு தெரியவந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாகவும்,நல்ல முறையிலும் நிறைவடைந்ததாகக் கூறிய அவர், இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுகவினர் அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். மின்சார பிரச்சினை குறித்து பேசிய அமைச்சர், பல மாநிலங்களிலும் மின்வெட்டு நிலவி வருவதாக தெரிவித்தார். பஞ்சாபில் 14 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாகவும், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் வாங்க முடியாத நிலை காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்சார பிரச்சினை சமாளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், பி.எஸ்.என்.எல். லைன் பணிகளின்போது மின் கம்பிகள் பாதிக்கப்பட்டதால் சென்னையின் சில பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் குறித்துப் பேசிய அமைச்சர், மிசா வழக்கில்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக கூறுவதற்கு தினகரனுக்கு கூச்சமாக இல்லையா என கேள்வி எழுப்பினார். தற்போது ஸ்டாலினுக்கு ஆதரவாக தினகரன் பேசி வருவதாகவும், ஜெயலலிதா 10 ஆண்டுகளாக தினகரனை ஒதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்தவரே தினகரன் என்றும், அவர் நேற்று ஒன்றையும் இன்று வேறொன்றையும் பேசுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார்.