இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கையே தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையாகவும், நிரந்தரக் கொள்கையாகவும் உள்ளது. இந்தக் கொள்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எப்போதும் எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்காது. இந்த நிலையில், 'மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி'த் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் சில குளறுபடிகள் ஏற்பட்டது அரசின் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற துறை ரீதியான விசாரணையில், குறிப்பிட்ட சில அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக மூன்று மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தவறுக்கு காரணமான உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகிய இரு அதிகாரிகளும் 01.10.2026 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்ப் பலகை உடனடியாக அகற்றப்பட்டு, அதே இடத்தில் இருமொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்த சில மணி நேரங்களிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கொள்கைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் துறைசார் அதிகாரிகள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த வடிவத்தில் மும்மொழிக் கொள்கை வந்தாலும் அதனை எதிர்ப்போம் என்றும், இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நிலைநிறுத்துவோம் என்றும் ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.