தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அண்ணாவின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய மாற்றங்களை உருவாக்கியதுடன், ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது தொலைநோக்குச் சிந்தனையையும், மக்கள் சேவையையும் பிறந்தநாளில் மனதார நினைவுகூர்ந்து போற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேடைப் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய அண்ணா, அவர்களின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தமிழ் மொழியின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாக, தமிழகத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டினார். மேலும், மாநில சுயாட்சிக்கான அடித்தளத்தை அமைத்ததுடன், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவும் வழிவகுத்தார். இதன்மூலம் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றார் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். அண்ணாவின் “கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” உள்ளிட்ட கொள்கை முழக்கங்களை மனதில் கொண்டு, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை வளரவும், தமிழின் பெருமையை பாதுகாக்கவும் இந்த நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.