தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், 76 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் தேதியையும், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் தேதியையும் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 18-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கப் போராடிய தலைவர்களின் தியாகத்தையும் போராட்ட வரலாற்றையும் நினைவுகூரும் வகையில், நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் தலைமை தாங்கினார். பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காகப் பாடுபட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மங்கலங்கிழார், மார்ஷல் நேசமணி, திருவாலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ். மணி, சாம் நத்தாணியேல், தோழர் ஜீவா உள்ளிட்டோரின் பங்களிப்புகள் இவ்விழாவில் நினைவுகூரப்பட்டன. விழாவில் வாழும் தமிழறிஞரும் கவிஞருமான கே. ஜீவபாரதி மற்றும் மறைந்த தமிழறிஞர்களான பேராசிரியர் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம். அகமது, சா. கந்தசாமி, டி.எம். பீர் முகமது ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கப் போராடிய எல்லைக் காவலர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.7,500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச்செம்மல் விருதுகள் மொத்தம் 76 பேருக்கு வழங்கப்பட்டன. விருதுடன் தலா ரூ.25,000 பரிசுத்தொகை, தகுதியுரை மற்றும் பொன்னாடையும் அளிக்கப்பட்டது. இதுதவிர, 1,330 திருக்குறள்களையும் முழுமையாக ஒப்புவித்த 179 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 குறள் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் சரவணன், நாராயணன், குழுந்தை ராணி நாச்சியார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் சிவா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.