கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். தமிழையும், பெரியார் பெயரையும் பயன்படுத்தி திமுக ஊழலில் ஈடுபடுவதாக விமர்சித்துள்ள அவர், இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், தமிழ் மொழியையும், அதன் இலக்கியப் பெருமையையும் தங்களுடையதாகக் கூறிக்கொண்டு மக்களிடம் பெருமை பேசும் திமுக, ஊழலில் முன்னிலையில் இருப்பதாக விஜய் சாடியுள்ளார். மண், மொழி, மானம் ஆகியவற்றைக் காப்பவர்கள் தாங்கள்தான் எனக் கூறிக்கொள்ளும் கட்சியின் ஊழல் முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான புத்தகங்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியில் 5.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே, பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாகச் சுட்டிக்காட்டியிருப்பதை அவர் வரவேற்றுள்ளார். அரசியலுக்கு வந்த தொடக்கத்திலேயே பெரியார் பெயரைப் பயன்படுத்தி திமுக கொள்ளையடிப்பதாகத் தாங்கள் குற்றம்சாட்டியதாகக் குறிப்பிட்ட விஜய், தற்போது கோவை பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் புத்தகக் கொள்முதல் முறைகேடு தங்களது விமர்சனங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியதாகப் பெருமை பேசும் திமுக தலைமை, அங்கு வாங்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் தரத்தைக்கூட முறையாகக் கவனிக்காமல் செயல்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தரமற்ற நூல்களைத் தேர்வு செய்து கொள்முதல் செய்திருப்பதாகக் கூறப்படும் விவகாரம், நூலகத்தையே ஊழல் நடைபெறும் இடமாக மாற்றியுள்ளதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை, டாஸ்மாக் மற்றும் ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததாகக் குறிப்பிட்டுள்ள விஜய், பள்ளிக் கல்வித் துறையிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அறிவுலக நூலகத்திலும் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டங்களுக்குச் செலவிடப்படுவது அனைத்தும் மக்களின் வரிப்பணம் என்பதால், இதுபோன்ற முறைகேடுகள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் திமுகவை எதிர்காலத் தலைமுறையினரும் தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் விஜய் கூறியுள்ளார். தமிழ் மொழி மற்றும் பெரியார் பெயரைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், மக்கள் மத்தியில் திமுக தொடர்ந்து தலைகுனியும் நிலை ஏற்படும் எனவும் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.