தமிழகம் வரும் பிரதமர் மோடி: முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்; பயணத் திட்டம் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகம் வரும் பிரதமர் மோடி: முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்; பயணத் திட்டம் வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி: முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்; பயணத் திட்டம் வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ள நிலையில், அவரது பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கிலோமீட்டர் வழித்தடத்தில், வடபூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்புச் சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அதேபோல், போரூர் முதல் வடபழனி வரையிலான பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்தப் பகுதியில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது சிக்னல் அமைப்பு, தண்டவாளத்தின் செயல்திறன், ரெயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு உறுதித்தன்மை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் ரெயில் இயக்குவதற்குத் தேவையான அனைத்து சோதனைகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நிறைவு செய்தது. பின்னர் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரும் இந்தப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து ரெயில் சேவையை இயக்குவதற்கான ஒப்புதலும் கிடைத்தது. பணிகள் நிறைவடைந்ததால் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நிகழ்ச்சிக்கான தேதியை இறுதி செய்வது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சேவை தொடங்குவதும் தள்ளிப்போனது. இந்த நிலையில், அக்டோபர் 11-ஆம் தேதி பூந்தமல்லி-வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுடனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டங்களுடனும் தொடர்புடைய பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் பயணத் திட்டம் அக்டோபர் 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.55 மணிக்கு சென்னை வந்தடைகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி ஹெலிபேடுக்கு செல்கிறார். காலை 11.30 மணியளவில் பூந்தமல்லியில் இருந்து போரூர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12 மணிக்கு போரூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் செல்கிறார். அங்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயா மைதானத்திற்குச் செல்கிறார். இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிற்பகலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைச் சிறப்பு மையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. மாலையில் சென்னை கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.