விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் வகையில், எழுத்தறிவிக்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சிகள் கோயில்களிலும் கல்வி நிறுவனங்களிலும் சிறப்பாக நடத்தப்பட்டன. தமிழகத்தில் விஜயதசமி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்தறிவித்து கல்வியைத் தொடங்குவது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளைச் சேர்க்கும் பணி தொடங்கியது. அங்கு அரிசியைப் பரப்பி, அதன் மீது ‘அ’ என்ற முதல் தமிழ் எழுத்தை எழுதச் செய்து குழந்தைகளின் கல்விப் பயணம் தொடங்கிவைக்கப்பட்டது. கோயில்களில் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சிகள் திருச்சி அருகே உள்ள உத்தமர் கோயிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இங்குள்ள சரஸ்வதி தேவியின் சன்னதியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெல்மணிகள் மூலம் எழுத்துப் பயிற்சி அளித்து வழிபட்டனர். சரஸ்வதி தேவி ஓலைச்சுவடிகளை ஏந்திய நிலையில் அருள்பாலிப்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலிலும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அங்கு நெல்மணிகளில் ‘அ’ என்ற எழுத்தை எழுதச் செய்து குழந்தைகளுக்கு எழுத்தறிவு அறிமுகப்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் புதிய மாணவர் சேர்க்கை தொடங்கியது. குழந்தைகள் அரிசியில் முதல் தமிழ் எழுத்தான ‘அ’ என்பதை எழுதி தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குவிந்த பெற்றோர் நாகர்கோவிலில் குழந்தைகளுக்கு முதன்முதலாகக் கல்வி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆயுதபூஜை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால், மாவட்டத்தின் பல கோயில்களிலும் இன்று காலையிலேயே வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் திரண்டனர். கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தனர். கேரளத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் சிறப்பு ஹோமம், எழுத்தறிவித்தல் காஞ்சிபுரத்தில் உள்ள சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை ஹயக்கிரீவர் ஹோமம், கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, புதிதாகப் பள்ளியில் சேர வந்த குழந்தைகளின் கைகளைப் பிடித்து அரிசியில் பெயர் எழுதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியிலும் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியைகள் குழந்தைகளுக்கு அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை எழுதப் பழக்கினர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியைகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர். இவ்வாறு விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கோயில்களில் குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.