வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்களில் ஒன்றான வெங்காயத்தின் விலை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது. இதனால் கிலோவுக்கு சுமார் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.அதேபோல், சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது.பொதுவாக வெளிச்சந்தையில் முக்கிய காய்கறிகளின் விலை அதிகரிக்கும் போது, விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரேஷன் கடைகள் வாயிலாக அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், தற்போது உயர்ந்துள்ள வெங்காயத்தின் விலையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளிலும் வெங்காயத்தை விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி கூறியதாவது:பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாபெட்) நிறுவனத்திடம் முதற்கட்டமாக 70,000 கிலோ வெங்காயம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.மத்திய அரசிடமிருந்து வெங்காயம் கிடைத்தவுடன், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.